அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் கடும் சரிவு..

கனடா மற்றும் மெக்சிகோ மீது தலா 25 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கும் டிரம்பின் முடிவால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகு அந்நாட்டு பங்குச்சந்தைகள் சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுவாகும். இதேபோல் ரெசிபுரோக்கல் டேக்ஸ் எனப்படும் பதில் வரி வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி பெரும்பாலான பங்குச்சந்தைகள் சரிவை கண்டன. அமெரிக்காவுக்கு இது மோசமான பொருளாதார செய்தி என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் எஸ்அன்ட் பி பங்குச்சந்தையில் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பப் பங்குகள் உள்ளிட்ட 11 துறை பங்குகள் 8.7 விழுக்காடு வரை சரிவை கண்டன. அமேசான் நிறுவன பங்குகள் 3.4% சரிந்துள்ளன. ரியல் எஸ்டேட், சுகாதாரத்துறை, வாடிக்கையாளர் உணவுகள் உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரியளவில் ஏற்றம் கண்டன. இதேபோல் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தையிலும் 649 புள்ளிகள் சரிந்தன. நாஸ்டாக் பங்குச்சந்தைகளிலும் 497 புள்ளிகள் சரிந்தன. அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்களின் பங்கு மதிப்பு 8.6 விழுக்காடு குறைந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 2 முறையாவது கடன்கள் மீதான வட்டியை குறைக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகளில் டெஸ்லா நிறுவன பங்குகள் 2.84 விழுக்காடு மதிப்பு சரிந்துள்ளன. சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டல் நிறுவன பங்குகள் 4 விழுக்காடு வரை குறைந்துள்ளன.