ஆப்பிளில் முதலீட்டை குறைத்த வாரன் பஃப்ஃபெட்..
உலகளவில் முதலீட்டுக்கு பெயர் பெற்ற மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் தனது பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷைர் நிறுவனம் வைத்திருந்த பங்குகள் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதலீட்டை அந்நிறுவனம் 50 விழுக்காடாக குறைத்துள்ளது. இதனால் வாரன் பஃப்பெட்டின் பண கையிருப்பு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் எத்தனை பங்குகளை வாரனின் நிறுவனம் விற்றுள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகவில்லை. முதல் காலாண்டில் 135.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடுகளை ஆப்பிள் நிறுவனத்தில் வைத்திருந்த பெர்க்ஷைர் இரண்டாவது காலாண்டில் அதை 84.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி பிஒய்டி, பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும் பெர்க்ஷைர் நிறுவனம் விற்றுள்ளது. பெர்க்ஷைர் நிறுவனம் வருவாயாக 30.348 பில்லியன் அமெரிக்க டாலர்களை பதிவு செய்திருக்கிறது. 2024-ல் இரண்டாவது காலாண்டில் மட்டும் அந்நிறுவனம் 75.5பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள பங்குகளை விற்றுள்ளது. புளூம்பர்க் நிறுவனத்தின் தரவுகளின்படி,ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் வெளிநாடுகளில் குறைவான வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பல நாடுகளில் உள்நாட்டு செல்போன்களுடன் ஆப்பிளால் போட்டிபோட முடியாத சூழல் காணப்படுகிறது. இதே நேரம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன