அமெரிக்காவில் நடப்பது என்ன? ரெசஷன் வருமா வராதா?
அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின்போதுதான் அமெரிக்காவின் கடன் விகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் பல்வேறு ஆக்கபூர்வ திட்டங்களும் அமெரிக்காவில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவே மந்த நிலையை சந்தித்தால் நிச்சயம் நல்லா இருக்காது. இந்நிலையில்தான் அமெரிக்காவில் ரெசஷன் எனப்படும் பொருளாதார மந்தநிலை வருமா வராதா என்பதை இந்த தொகுப்பில் பாருங்க.. அதற்கான காரணிகளையும் நாங்கள் அடுக்குகிறோம்.. கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மத்திய பெடரல் ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 5.2-5.5 விழுக்காடாகவே தொடர்கிறது. நீண்டகாலமாக இதே பாணியில் கடன்கள் மீதான வட்டியை பிடித்து வைத்திருந்தால் கண்டிப்பாக மந்தநிலை வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.. பொருளாதார மந்தநிலை என்றால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் கடும் பாதிப்பும், தொழிற்சாலை உற்பத்திகள் குறையும், வேலைவாய்ப்பின்மை அதிகமாகும். கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக 1.79 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்ட நிலையில் அது தற்போது 1.14 லட்சமாக ஜூலையில் குறைந்துள்ளது. இது மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்கனவே பணியில் இருந்தவர்களை தூக்கி வெளியே வீசும் போக்கும் அதிகரித்துள்ளது. பாரபட்சமே இல்லாமல் ஆட்டோமொபைல், ஃபைனான்ஸ், சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் 2024-ல் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணிநீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை ஒரு டைம் பாம் போல செயல்படுவதாகவும் எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் என்ற நிலை இருப்பதாகவும் அமெரிக்க நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்களால் 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.