தங்கம் விலை சரிந்து பின்னர் உயர காரணம் என்ன?
இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு தங்கம் விலை குறைந்தது. ஆனால் சர்வதேச அளவில் மீண்டும் உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு முக்கிய காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக உலகளவில் நிகழ்ந்து வரும் பொருளாதார சமநிலையற்ற தன்மையும், பொருளாதார மந்த நிலையும் தங்கம் விலை சரிந்து பின்னர் மீண்டும் உயர முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. டாலரின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை டாலரில் இருந்து மீண்டும் தங்கம் பக்கம் திருப்பவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். ஒரு அவுன்ஸ் தங்கம் திங்கட்கிழமை நிலவரப்படி சர்வதேச அளவில் 2 ஆயிரத்து 587 டாலர்களாக விற்பனையாகிறது. அமெரிக்க தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் 0.9% உயர்ந்து 2 ஆயிரத்து 592 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதன் மதிப்பு குறைந்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதாரத்தில் வட்டி விகிதம் பெரியளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தங்கத்தின் மீதான மதிப்பு குறைந்திருப்பதும் இந்தியாவில் தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.