உச்சம் தொட்ட அமெரிக்க பங்குச்சந்தைகள்..
பெருந்தொற்று நேரத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் மக்களை பாடாய்படுத்திய நிலையில் அதை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயர்த்தியிருந்தது. தற்போது பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரைவிழுக்காடு அளவிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைத்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய அளவு முன்னேற்றம் காணப்படுகிறது. வியாழக்கிழமை வர்த்தக நேரத்தில், S&P 500 பங்குச்சந்தையில் 1.7% உயர்வும், டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை 1.3% உயர்வும் பெற்றன. 42,025 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தையும் அந்த பங்குச்சந்தை எட்டியது. டெக் துறையில் பெரிய பங்குச்சந்தையாக கருதப்படும் நாஸ்டாக் பங்குச்சந்தையில் 2.5%உயர்வு காணப்பட்டது. 18,013 புள்ளிகளில் அந்த பங்குச்சந்தை வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து S&p 500 பங்குச்சந்தை 20% உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நாஸ்டாக் 22 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை 11%உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் நடவடிக்கைக்கு ஏற்ப அமெரிக்க பங்குச்சந்தைகள் ஆட்டம் போடும் என்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்தாண்டு இறுதியில் மேலும் 50 அடிப்படை புள்ளிகளை குறைக்க இருக்கும் நிலையில், ஃபெடரல் ரிசர்வ்வின் நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.