வட்டி குறைப்பை நிறுத்தி வைக்குமா ரிசர்வ் வங்கி..?
கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றப்போவதில்லை என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை குழு அண்மையில் கூடி வட்டி விகிதம் குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் குறித்தும், பணவீக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. போர் சூழல் காரணமாக இந்தியாவிலும் உள்ளூர் சந்தைகளில் பொருட்கள் விலை உயரும் சூழல் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.50%என்ற அளவிலேயே குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 9 ஆம் தேதி வரை நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஓராண்டாக உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி கடுமையாக போராடி வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நிகழும் மோதல் போக்குகள் உள்ளிட்டவையால் பல நாடுகளின் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழலும் ரிசர்வ் வங்கி நிதி ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளும் கடந்த சில மாதங்களாக வட்டியை குறைத்துள்ளன. சர்வதேச அளவில் வட்டி குறைப்பால் கிடைக்கும் சாதக நிலையை இந்தியா தமக்கு தேவையான அளவுக்கு மாற்றி வருகிறது. உள்ளூர் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே இந்திய ரிசர்வ் வங்கிக்கு பெரிய சவாலாக இருக்கிறது.