இந்திய சந்தைகளில் பின்னடைவா?மோசமானது இன்னும் இருக்கா.?

இந்திய பங்குச்சந்தைகளில் 2025 ஆம் ஆண்டு தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் 5 ஆவது பெரிய பங்குச்சந்தையை கொண்ட இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சியும், அதிக பங்குகளை விற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளன. ஒரு சிறிய சம்பவம் உலகளவில் நடந்தாலும் பங்குச்சந்தைகள் அதற்கு தகுந்தபடி இயங்குவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் பங்குச்சந்தைகளில் அதிக லாபத்தை பதிவு செய்வது மட்டுமே இலக்காக சிலர் இயங்கி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் நிஃப்டி 50 பங்குகள் 13% வரை சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 12% விலை வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் மட்டும் அதாவது 2025 தொடக்கத்தில் இருந்து இதுவரை 4.3%அளவுக்கு இரண்டு பங்குச்சந்தைகளும் சரிவை கண்டுள்ளன. நிஃப்டி மிட்கேப்100 20 % , நிஃப்டி ஸ்மால் கேப் 100 பங்குகள் 23% வரை சரிவை கண்டுள்ளன. உலகளாவிய சமநிலையற்ற சூழலும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் குறியீடு 0.23% உயர்ந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஹாங்காங், தென்கொரியா பங்குச்சந்தைகள் முறையே 17 மற்றும் 10 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன. உலகளாவிய சந்தையில் இந்திய பங்குச்சந்தைகள் மட்டும் கடந்த 14 மாதங்களில் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு கீழ் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்திய சந்தைகள் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்ததையே இது காட்டுகிறது. 2025 தொடங்கியது முதல் இந்திய சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். இந்திய சந்தைகள் சரிவுக்கு பிரதான காரணமாக இருப்பது உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டாமல் சொதப்புவதே கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியை எட்டியுள்ளதும்,அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் முதலீட்டு செலவினங்களில் பெரிய மாற்றம் செய்யப்படாததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்புது வரிகள் விதிப்பதும் வருங்காலத்தில் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான முதலீடுகளை தேடி மக்கள் செல்வதும் இந்திய சந்தைகளில் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.