இனியாவது விலை குறையுமா?

ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
2 விழுக்காடாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி, பிரதமர் மோடியின் முயற்சியால் 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும்,பிரதமரின் நடவடிக்கைக்கு நன்றி என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் இந்தியா 2-வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடு என்ற நிலையில் உள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு முன்பு இந்தியா ஈராக்கில் இருந்துதான் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாத தரவுகளின் படி, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 24 விழுக்காடு கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாகவும்,ஈராக்கில் இருந்து 21 விழுக்காடு கச்சா எண்ணெயும், சவுதி அரேபியாவிடம் இருந்து 15 விழுக்காடும் வாங்கி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கிடைத்தவரை லாபம் என ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது சாதுர்யமான செயலாகவே காண முடிகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினாலும், வழக்கமாக வாங்கும் அளவிலேயே சவுதி,ஈராக்கில் இருந்தும் எண்ணெய் பேரல்களை இந்தியா வாங்கும் என்று ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எல்லாம் சரி… பெட்ரோல், டீசல் விலை குறையுமா?