விப்ரோ போனஸ் தரப்போகிறதா?
நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டின் முடிவுகளை விப்ரோ நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு அளிக்கவும் அந்நிறுவன இயக்குநர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பாக விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் வரும் 16-17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு அளிக்கவும், தங்கள் நிறுவன பங்குகளின் விலையை குறைப்பதால் அதிக முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள் என்றும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக விப்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன. போனஸ் பங்குகள் என்பது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் அம்சமாகும். ஏனெனில் போனஸ் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் எந்த பணமும் தரவேண்டியது கிடையாது. எந்த தேதிக்கு பிறகு போனஸ் பங்குகளை வழங்குவது என்பது குறித்து விப்ரோ நிறுவனம் விரைவில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. போனஸ் பங்கு பெறும்போது, ஏற்கனவே பங்குகளை வைத்திருப்போருக்கு அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளும் அளிக்கப்படும் என்றும், டிவிடண்ட் உள்ளிட்ட பலன்களும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவன பங்குகளின் மதிப்பு 0.66%உயர்ந்து ஒரு பங்கு ரூ. 528 என்ற விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.