பெரும்பாலான இந்தியர்கள் செய்யும் தவறு இதுவா?
ஜூரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிதின் காமத் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார், அதில் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் திவாலாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார். மேலும் ஆக்கபூர்வமான காப்பீட்டு திட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காப்பீட்டு திட்டங்களை இந்தியர்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், 5-10 ஆண்டுகள் இந்த துறையில் இருக்கும் காப்பீட்டு நிறுவனங்களையும், 80 முதல் 90 %கிளைம் செட்டில்மன்ட் தரும் வகையிலான காப்பீடுகளை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதால் கடினமான நேரங்களில் நிதிச்சிக்கல்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறியுள்ள காமத், குறைவான தூக்கம், அதிக வேலை, தந்தையின் மறைவு ஆகியவை தனது உடல்நலம் பாதிக்க முக்கிய காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 5ஆயிரம் முதல் 8ஆயிரம் மருத்துவமனைகளை தங்கள் நெட்வொர்க்கில் வைத்துள்ள காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் 55 முதல் 75விழுக்காடு வரை கிளைம் வரும் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே அதிகளவாக மருத்துவ பணவீக்கம் இந்தியாவில்தான் 14%ஆக உள்ளதாகவும், பிளம் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 71%மக்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து தான் மருத்துவ செலவுக்கு பணம் தருவதாகவும், 15 % மக்கள் மட்டுமே நிறுவனங்களில் இருந்து மருத்துவ காப்பீடு பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 43%பேர் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒப்புதல் பெறுவதில் பிரச்சனைகள் உள்ளதாக கூறுகின்றனர். பல சமயங்களில் கிளைம்கள் நிராகரிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.