600 பேரை வேலையை விட்டு தூக்கிய சொமேட்டோ..

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது வாடிக்கையாளர் சேவை மைய பணியாளர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் ஓராண்டு மட்டுமே சொமேட்டோவில் பணியாற்றிவர்கள். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்ததை அடுத்தே இந்த நடவடிக்கையை சொமேட்டோ நிறுவனம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த பணிநீக்கம் என்பது எதிர்பார்க்காதது என்றும், தங்களை நடத்தும் விதம் நியாயமற்றது என்றும் வேலையை இழந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தாங்கள் எதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டோம் என்பதே இதுவரை தெரியவில்லை என்றும் சிலர் புலம்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் சொமேட்டோ நிறுவணம் இதுவரை எந்த பெரிய கருத்தையும் வெளியிடவில்லை. நக்கட் என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வாடிக்கையாளர் பயிற்சி மையத்தில் அண்மையில் சொமேட்டோ அறிமுகப்படுத்தியது. இந்த பிளாட்ஃபார்ம் மூலம் மட்டும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களிடம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பதில் அளிக்கிறது. சொமேட்டோ, பிளிங்கிட், ஹைபர் பியூர் ஆகிய நிறுவனங்களுக்கும் இந்த நுண்ணறிவே பதிலை அளித்து விடுகிறது.
பணமும் குறைவு அதே நேரம் டெவலப்பர் டீமும் தேவைப்படாது என்பதால் அண்மையில் நக்கட் நுட்பத்தை சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிமுகப்படுத்தினார். நக்கட் செயலி வந்த பிறகு வாடிக்கையாளர்கள் சேவையில் 80 விழுக்காடு வேலையை அந்த தளமே பார்த்துக்கொள்கிறது. ஒரு பிரச்சனையை தீர்க்க வழக்கமான நுட்பங்களை விட 20 விழுக்காடு நேரத்தையும் செயற்கை நுண்ணறிவு கருவி மிச்சப்படுத்துவதாக அந்த உணவு டெலிவரி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.