டாடா மோட்டார்ஸின் அசத்தல் அறிவிப்பு..
டாடா மோட்டார்ஸின் வணிக வாகனப் பிரிவான டிஎம்எல் கமர்ஷியல் வெஹிக்கள்ஸ் லிமிடெட் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பட்டியலிடப்பட்ட நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட், அதன் பெயரை டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கள்ஸ் லிமிடெட் என மாற்றும் என்று அந்நிறுவனம் பங்கு சந்தைகளிடம் தெரிவித்தது.
இந்த மறுசீரமைக்கப்பட்ட நிறுவனம், அதன் மின்சார வாகன உற்பத்தி மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவரில் (ஜே.எல்.ஆர்) முதலீடுகள் உட்பட பயணிகள் வாகன உற்பத்தியை தொடரும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பங்கு வெளியீட்டிற்கு தகுதியான பங்குதாரர்களை அடையாளம் காண்பதற்கான பதிவு தேதி அக்டோபர் 14, 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, வணிக வாகன உற்பத்தி பிரிவு, டிஎம்எல் கமர்ஷியல் வெஹிக்கள்ஸ் லிமிடெடுக்கு (டிஎம்எல்சிவி) மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் முடிந்ததும், டிஎம்எல்சிவி, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் வணிக வாகன சந்தையில், இந்நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தை திறம்பட தொடரும்.
இந்த மறுசீரமைப்பு, டாடா மோட்டார்ஸின் நிறுவன கட்டமைப்பை நெறிப்படுத்தவும், அதன் பயணிகள் மற்றும் வணிக வாகன செயல்பாடுகளை சுயாதீனமாக செயல்படும் நிறுவனங்களாக பிரிக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
