ஒழுங்கா சார்ஜரையும் சேர்த்து கொடுங்க…ஆப்பிளுக்கு ஆப்படித்த பிரேசில் கோர்ட்….
தலைசிறந்த செல்போன் நிறுவனமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபோன்களுக்கு சார்ஜரை இலவசமாக வழங்குவதை நிறுத்தியது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் இதனை எதிர்த்து பிரேசிலில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஒட்டுமொத்த வழக்குகளையும் விசாரித்த பிரேசிலிய நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனம் அடாவடித்தனமான விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும், 19 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தும் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ஐபோன்களை சார்ஜருடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் ஆப்பிள் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் உலகின் பிற நாடுகளிலும் இந்த தீர்ப்பு வருமா என்று ஆப்பிள் போன்களை வாங்க நினைப்பவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். செல்போனுடன் இலவசமாக சார்ஜ் அளிக்காமல் இருக்கும்போது கரியமில வாயு குறையும் என்றால் அந்த போனுக்கு தனியாக காசு கொடுத்து சார்ஜர் வாங்கும்போது வாயு வெளியேற்றம் இருக்காதா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. ஆப்பிளின் அடாவடியான முடிவுக்கு பிரேசில் நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பளித்துள்ளதாக இணையத்தில் இந்த தீர்ப்பை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.