எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடித்த ஓஎன்ஜிசி..
எரிபொருள் சார்ந்த பொருட்களை 85 விழுக்காடு வரை இந்தியா வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் எரிபொருளால் இந்திய பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை சார்ந்தே இருக்கிறது. இந்த நிலையில் இயற்கை எரிவாயுவை மையப்படுத்தியே இயங்கும் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மகாநதி படுகையில் எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த எரிவாயுக்கள் வங்கக்கடலில் இருக்கிறது. மொத்தம் இரண்டு இடங்களில் இயற்கை எரிவாயு கிடைத்திருக்கிறதாம். முதல் இடத்துக்கு உக்தல் என பெயரிடப்பட்டுள்ளது. இது நீருக்கு அடியில் 714 மீட்டர் ஆழத்தில் இருக்கிறதாம். இரண்டாவது ஆதாரம் ஆயிரத்து 100 மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உக்தல் பகுதியில் ஒரு நாளைக்கு 3 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதாக சோதனையில் தெரியவந்தது. இந்தியாவில் 2030ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு பங்கின் அளவை 15%ஆக உயர்த்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது 6.3விழுக்காடாக உள்ளது. இந்தியா 2070 ஆம் ஆண்டு கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க முயற்சித்து வருகிறது. எரிபொருளாக தற்போது பயன்படும் நிலக்கரிக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டால் கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துவிடும். குறிப்பிட்ட இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாது. அந்தளவு கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியில் சோதனை நடந்துள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ள நிலையில் டோட்டல் நிறுவனத்துடன் ஓ என்ஜிசி ஒப்பந்தம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு இடங்களில் இயற்கை எரிவாயு கிடைத்ததை அடுத்து உலக நாடுகளின் முதலீட்டு கவனம் இந்த இடங்களின் மீது திரும்பியுள்ளது.