இந்தியாவில் உருவாகிறது சாம்சங் லேப்டாப்…
பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய லேப்டாப்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில் இந்த உற்பத்தி இந்தாண்டே தொடங்க இருக்கிறது. இது குறித்து பேசிய சாம்சங்க் நிறுவன அதிகாரி ஒருவர், தங்கள் உற்பத்தியில் மிகமுக்கிய பங்காளராக இந்தியா உள்ளதாக புகழ்ந்துள்ளார். உற்பத்திக்கு தேவையான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் உரிய வசதிகளை செய்து தருவதாக சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்நிறுவனம் கேலக்சி எஸ்24 ரக போன்களை நொய்டாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த செல்போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளது. சாம்சங்கின் உற்பத்தி மையங்களில் நொய்டாவின் உற்பத்தி ஆலையும் முக்கியமானது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில்தான், சாதாரண பட்டன் ரக போன்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் அணியக்கூடிய கணினிகள் மற்றும் டேப்லட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தாண்டே நொய்டா தொழிற்சாலையில் புதிய ரக லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதிபடத் தெளிவுபடுத்தினர்.