வந்தாச்சி..பாரத் அரசி..கிலோ 29 ரூபாய்…
அரிசி விலை உயர்வு சாதாரண மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி விலை 15 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பாரத் ரைஸ் என்ற புதிய அரிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அரிசி ஒரு கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் இந்த அரிசி மானிய விலையான கிலோ 29 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய உணவுக் கழகம் 5 லட்சம் டன் அரிசியை முதல்கட்டமாக NAFED மற்றும் NCCF இரண்டு சந்தைகளுக்கும், Kendriya Bhandar என்ற சந்தைக்கும் அளித்திருக்கிறது. பாரத் என்ற பெயரில் சில்லறையாக இந்த அரிசிகள் கிடைக்கும் நிலையில் மின் வணிக நிறுவனங்களிலும் இந்த அரிசி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி சந்தையில் அரிசியை இந்திய உணவு கழகம் விற்பனை செய்தபோது அது அமோக வரவேற்பை பெற்றது. ஏற்கனவே பாரத் ஆட்டா என்ற பெயரில் கோதுமை மாவு கிலோ 27ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பாரத் சன்னா என்ற பெயரில் கொண்டை கடலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி அளிக்கப்படும் நிலையில் , மத்திய உணவு கழகத்திடம் அதைவிட அதிக அரிசி உள்ளது. அதனைத்தான் தற்போது திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பாரத் அரிசி படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் குறைந்த விலையில் இந்த அரிசி விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.