வீடு,வாசலுடன் பிரமிக்க வைத்த யாசகர்..
ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு வாய் பிளக்கும் காட்சியைப்போலவே பெண் ஒருவர் அதிகாரிகளை மிரள வைத்துள்ளார். இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா பாய் என்ற பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்து வந்தார். இவர் குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, இந்திராபாய் பெயரில், 2 அடுக்கு மாடி வீடு, நிலம் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பிடிபட்டது. வெறும் 6 வாரங்களில் இத்தனை தொகையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு முன்பு இதே பாணியில் பல முறை சிறை சென்ற இந்திராபாய், தனது மகள்களை வைத்தும் யாசகம் பெற்றுள்ளார். திருடுவதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைப்பை நடத்துவதாக இந்திரா பாய் அதிகாரிகளை வாய் பிளக்க வைத்திருக்கிறார். இந்தூரில் தனியார் அமைப்பு ஒன்று இந்தூரில் உள்ள பிச்சைக்காரர்கள் பற்றி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. 7 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கும் நிலையில் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகளாக இருக்கின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தூரில் பிச்சை எடுத்து கிடைத்த பணத்தில் ராஜஸ்தானில் விவசாய நிலமும், 2 அடுக்கு மாடி வீடும் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திரா பாயின் கணவர் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார். பிச்சை எடுப்பதை தடுக்கும் நோக்கில் பல தொண்டுநிறுவனங்கள் களமிறங்கியுள்ள போதும், இந்தூரில் இதே அவல நிலை தொடர்ந்து வருகிறது.