2.52லட்சம் சம்பளம் குறித்து சிடிஎஸ் விளக்கம்..
அண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2.52லட்சம் ரூபாய் சம்பளம் என்பது இன்ஜினியரிங் இல்லாத மற்ற படிப்பு படித்தவர்களுக்குத்தான் என்று கூறப்பட்டுள்ளது. பொறியியல் படித்தவர்களுக்கான சம்பளம் 4 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பொறியியல் படித்தவர்களுக்கு மற்ற நிறுவனங்களைவிட காக்னிசண்ட்டில் சம்பளம் அதிகம்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் டிகிரி படித்தவர்களுக்குத் தான் 2.52லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் திறமை சார்ந்த சான்றிதழ்களின் அடிப்படையில் சம்பளம் மாறுபடும் என்றும் அந்நிறுவனம் விளக்கியுள்ளது. பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதாக கூறியுள்ள இந்நிறுவனம், தற்போதைய டிரெண்டில் செயற்கை நுண்ணறிவு உள்ளது என கூறியுள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய செயல்பாடு பற்றி அந்நிறுவன அதிகாரி கும்மாடி கூறுகையில், இந்தியாதான் காக்னிசண்டின் இதயம் என்றும், மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி மையம் என்றும் கூறியுள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தில் 70 விழுக்காடு அதாவது 3லட்சத்து 36 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் மெட்ரோ நகரங்கள் மற்றும் 2 ஆம் நிலை நகரங்களில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் கும்மாடி கூறியுள்ளார்.