மதாபிக்கு பணம் தரவில்லை- ஐசிஐசிஐ
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவர் மதாபி, ஐசிஐசிஐ வங்கியில் இருந்து விலகி வந்த பிறகும் அவருக்கு 17 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்தது எப்படி என சர்ச்சை உலா வந்தது. இதற்கு ஐசிஐசிஐ வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் மதாபிக்கு தங்கள் தரப்பில் இருந்து சம்பளம் ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கவேண்டிய தொகையை மட்டுமே விடுவித்ததாகவும் அந்த வங்கி கூறியுள்ளது. 2017-ல் செபியில் சேர்ந்த மதாபிக்கு,ஐசிஐசிஐ வங்கியில் இருந்து 17 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக வந்தது எப்படி என்று செபியின் தலைவர் மதாபி மீது காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா குற்றச்சாட்டு தெரிவித்தார். 2017 முதல் 2024 வரை மதாபிக்கு கிடைத்த தொகை செபின் விதிகளை மீறியது என்றும் பவன் கேரா குற்றம் சாட்டினார். செபியில் இருக்கும் அதன் தலைவருக்கு வேறொரு வருமானம் வருவது பிரதமர் மோடிக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்னவே ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம், மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானி குழும பங்குகளுக்கும் மதாபிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. வணிக ரீதியில் மதாபி மற்றும் அவரின் கணவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.