திருச்சிக்கு வருகிறது ஜபில் நிறுவனம்..
பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஜபில் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய இருக்கிறது. ஜபில் நிறுவனமானது ஆப்பிள், எச்பி.சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம், 2,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்து, திருச்சியில் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் , தமிழ்நாடு முதலமைச்சருடன் ஜபில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இருக்கும் நிலையில் ஜபில் நிறுவனத்தின் வருகையால் திருச்சி புதிய மின்சார சாதன பொருட்கள் மையமாகமாக மாறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த சூழலில் ராக்வெல் ஆட்டோமேஷன் என்ற நிறுவனமும் தனது உற்பத்தி ஆலையை காஞ்சிபுரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிறுவனம் 666 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் நோக்கியா நிறுவனமும் செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பிரபல நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.