நிதியமைச்சரிடம் சரமாரிகேள்வி கேட்ட கோவை ஹோட்டல் உரிமையாளர்..
கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதியமைச்சரிடம் சரமாரி கேள்வி எழுப்பியதுதான் தேசிய அளவில் டிரெண்டிங். ஒரு பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன் மீது கிரீம் தடவினால் அதற்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டி போடப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் பன்னையும் கிரீமையும் தனித்தனியாக எடுத்துவரச் சொல்வதாக வேடிக்கையாக பேசினார். ஒரே உணவகத்தில் வேறு வேறு உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி வரி விதிப்பால் கணினியே கன்பியூஸ் ஆவதாகவும் பேசி கலகலப்பையும் நிதியமைச்சருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். இனிப்புக்கு 5விழுக்காடு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஏன் 12 விழுக்காடு ஜிஎஸ்டி என்றும் சீனிவாசன் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்தையும் கண்காணிக்கிறது என்றார். அண்மையில் கூட ஊறுகாய் விற்பவர் என்று சிலர் தம்மை கேலி செய்ததாகவும் நிதியமைச்சர் பேசியிருந்தது வைரலான நிலையில், கலகலப்பாகவும் அதே நேரம் பிரச்சனையை எளிமையாகவும் புரிய வைத்தார் ஸ்ரீனிவாசன். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1500 பழைய சட்டங்களை நீக்கவும், 40 ஆயிரம் புகார்களை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.