இந்தியா சிமென்ட்ஸை வாங்கியது ஏன் என அல்ட்ராடெக் விளக்கம்..
இந்தியாவின் மிகப்பெரிய கிரே சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக திகழும் அல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கும் பேச்சுவார்த்தையை இறுதி செய்தது. இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்துக்கு அல்ட்ராடெக் நிறுவனம் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனத்தைத்தான் தாங்கள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு சொந்தமான அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் நிறுவனம், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 32.72விழுக்காடு பங்குகளை3954 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதாவது ஒரு பங்கின் விலை 390 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே 22.7விழுக்காடு பங்குகளை இந்த இரு நிறுவனங்கள் கைமாற்றியிருந்தன. இதையடுத்து அல்ட்ராடெக் நிறுவனத்திடம் 55.49 விழுக்காடு அளவுக்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள் உள்ளன. தென்னிந்தியாவில் இரு நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவை இந்தியா சிமென்ட்ஸ் சந்தித்து வருவதாகவும் அல்ட்ராடெக் நிறுவனம் கூறியுள்ளது. கடன் சுமை அதிகரித்ததால் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸுக்கு சொந்தமான சில இடங்களையும் அதன் தலைவர் ஸ்ரீனிவாசன் விற்கும் நிலை உருவானது. 2024 நிதியாண்டில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 216 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவுக்கு சிமென்ட் வியாபாரத்தை நடத்துவதில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.