விதிகளை கடுமையாக்க வேண்டுமென செபிக்கு அழுத்தம்..
இந்திய பங்குச்சந்தையில் ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் என்ற பிரிவு பங்குகள் பெரியளவில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை செபியே தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் உறுதி செய்திருக்கிறது. அதாவது கடந்த 2021-22, 23-24 காலகட்டங்களில் , 93 விழுக்காடு சில்லறை முதலீட்டாளர்கள் இந்த துறையில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரே ஒரு விழுக்காடு அளவுக்கு மக்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் லாபம் கிடைப்பதாக கூறப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக இதுபோன்ற எச்சரிக்கை அறிக்கையை செபி வெளியிடுகிறது. 2021-22 காலகட்டத்தில் வெறும் 50 லட்சமாக இருந்த முதலீட்டாளர்கள், 2023-24 காலகட்டத்தில் 1 கோடியாக உயர்ந்துள்ளனர். ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில் இத்தகைய பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும் இதில் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் 1.8லட்சம் கோடி ரூபாயை இந்த துறையில் இழந்துள்ளனர். 2023-24 காலகட்டத்தில் மட்டும் 61,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10-ல் 9 பேர் அதாவது சராசரியாக 2 லட்சம் ரூபாயை இந்த துறையில் மக்கள் இழந்து வருகின்றனர். முதலீட்டாளர்களில் 72 %அளவினர் சிறிய நகரங்களைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவானவர்கள். சில்லறை முதலீட்டாளர்கள் பெரிய இழப்பை சந்திக்கும் அதே நேரம், மற்ற பெரிய நிறுவனங்கள் பல கோடிகளை லாபமாக ஈட்டி வருகின்றன. தொடர்ந்து பலரின் பணத்தை காலி செய்து வரும் போலியான நிதி ஆலோசகர்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசும் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் 15 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு,கண்காணிப்பை செபி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பெரிய இழப்புகளை தடுக்கும் நோக்கில், செபி தனது விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.