ரத்தன் டாடாவை பற்றி நாராயண மூர்த்தி பேசிய நினைவலைகள்..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். இந்நிலையில், ரத்தன் டாடாவின் தொழில் போட்டியாளரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவை பற்றி பேசி நெகிழ்ந்துள்ளார். ரத்தன் டாடாவின் இழப்பு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ள நாராயண மூர்த்தி, பல தருணங்களில் ரத்தன் டாடாவை பார்த்து பிரமித்துள்ளதாக கூறியுள்ளார். தேசபக்தியும், கண்ணியமும், நன்றி உணர்வும் டாடாவிடம் அதிகமாக இருந்ததாகவும் நாராயண மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்., இன்போசிஸின் நிகழ்ச்சி ஒன்று 2004-ல் நடைபெற்றது. அப்போது ரத்தன் டாடாவை தாம் அழைத்ததாக கூறிய நாராயண மூர்த்தி, டிசிஎஸின் போட்டியாளரான இன்போசிஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், ஜம்ஷெத் அவர்கள், தனது போட்டியாளர்களை மதிப்பார் என்றும், அதே பாணியில் தாமும் மதிப்பதாகவும், ரத்தன் கூறியிருந்தார். பின்னர் 2020-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரத்தன் டாடாவுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்ததுடன் ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். தொழிலில் போட்டியாளர்களாக இருந்தபோதிலும் இருவரும் கண்ணியம் காத்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. போட்டியாளரை எப்படி மதிப்பது என்று இரு ஜாம்பவான்களும் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.