தொடர்ந்து பங்கம் செய்யும் தங்கம்..
இது என்ன தங்கம் இப்படி விலையேறி வருகிறது என்று புலம்பாத மக்களே இல்லை என்ற நிலைதான் இந்தியாவில் தற்போது உள்ளது. டெல்லியில் புதன்கிழமை இதுவரை இல்லாத புதிய உச்சமாக 10 கிராம் தங்கம் 78 ஆயிரத்து 900 ரூபாயாக விற்கப்பட்டது. பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கம் பக்கம் மாற்றி வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை 2 ஆயிரத்து 600 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே இந்த விலையேற்றத்துக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல், உலகளவில் நிலவும் போர்ப்பதற்ற சூழல்களும் நிலைமையை சிக்கலாக்குகின்றன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், அந்நாட்டு சில்லறை வணிகம், தொழில் உற்பத்தி, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி தரவுகள் விலை குறையுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து வரும் நாட்களில் உயர்ந்துகொண்டேதான் இருக்கும் என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்தான் முக்கிய காரணம் என்றும் வணிகர்களும், பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.