பணத்தை எடுத்துச்சென்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..
அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் பெரும்பாலானவற்றை வெளியே எடுத்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதி வரை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 70 ஆயிரத்து 398 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். செப்டம்பரில் 57ஆயிரத்து 724 கோடி ரூபாய் முதலீடுகள் வந்து குவிந்த நிலையில் அடுத்த மாதமே முதலீடுகள் காணாமல் போயுள்ளன. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்ட காரணிகளால் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஈக்விட்டி பங்குகள் அதிக மதிப்பு கொண்டவையாக இருப்பதாலும், மத்திய கிழக்கு நாடுகளில் சண்டை நடப்பதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்ததால் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல் துறை மற்றும் நிதிசேவைகள் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிதி சேவை நிறுவனங்களில் 23,283 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வெளியே சென்றுள்ளது. கடந்த மாதம் 27,200 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் வெளியே சென்ற முதலீட்டு அளவு 12,371 கோடி ரூபாயாகவும், ஆட்டோமொபைல் துறை பங்குகளின் மீதான முதலீடுகள் அக்டோபரில் 8131 கோடி ரூபாயாகவும் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.