தனியார் வங்கிகளில் நடப்பது என்ன..
இந்தியாவில் தனியார் வங்கிகளில் பணியாளர்களின் பணிச்சுமை அதிகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆரோக்கியமான பணி-சொந்த வாழ்க்கை சூழலை அமல்படுத்த தனியார் வங்கிகள் புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அலுவலக நேரம் தாண்டி பணியாளர்கள் பணியாற்றுவதை தனியார் வங்கிகள் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
தனியார் வங்கிகளில் வேலை பார்க்கும் நபர்கள் வெளியேறும் எண்ணிக்கை கடந்த 2022-23 காலகட்டத்தில் அதிகரித்தது. இது தற்போது குறைந்துள்ளது. அரசு வங்கியில் பணிப்பாதுகாப்பு உள்ளதால் பெரிய அளவில் பணியாளர்கள் வெளியேறுவதில்லை, மாறாக தனியார் வங்கிகளில், அதிக பணிச்சுமை காரணமாக பலரும் தங்கள் வேலையை உதறி தள்ளி விடுகின்றனர். யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிதேஷ் ரஞ்சன் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார், அதில் மாலை 6.30 மணிக்கே அலுவலகத்தை மூடவேண்டும் என்றும் தேவையின்றி இரவு நேரங்களில் அலுவலக சிக்கல்தொடர்பாக பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். ஆக்சிஸ் வங்கியில் மாலை 7 மணிக்கு பிறகு அலுவலக பணிகளை செய்ய வேண்டாம் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு முன்னெடுப்புகளால் ஆக்சிஸ் வங்கியில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் விகிதம் 34.8 விழுக்காட்டில் இருந்து 28.8 விழுக்காடாக குறைந்துள்ளது. அரசு வங்கிகளை விட அதிகம் சம்பளம் தரும் தனியார் வங்கிகள், டார்கெட் தருவதால், அதனை முடிக்க தனியார் வங்கிகளின் பணியாளர்கள், கட்டாயம் கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே நிதர்சனமாக உள்ளது.