மளிகை கடைகளுக்கு பாதிப்பு..
மின்வணிக நிறுவனங்கள் தங்கள் அடுத்த முயற்சியாக துரித வணிக நிறுவனமாக மாறியுள்ளன. இதன் தாக்கம் எப்படிப்பட்டது என்றால், வீட்டில் அடிப்படையாக தேவைப்படும் அன்றாட பயன்பாட்டுப்பொருட்களை கூட ஆன்லைனில் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. பழங்கள், பாத்திரம் கழுவும் திரவம் கூட ஆன்லைனில் மலிவாக கிடைக்கும்போது எதற்கு மளிகைக்கடைக்கு செல்லவேண்டும் என்று பலரும் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. நகரங்களில் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று பலரும் வாதிடுவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் 5%மக்கள் மளிகைக்கடையில் பொருட்கள் வாங்குவதையே நிறுத்தியுள்ளனர். இளம்தலைமுறையினர்தான் இணையத்தை நம்பியுள்ளதாகவும், கொஞ்சம் வயதானவர்கள் வெளியில் சென்று பொருட்களை வாங்குவதைத்தான் விரும்புவதாகவும் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். வேலைகளுக்கு செல்பவர்கள் மிகவும் சோர்வடைந்து ஆன்லைனிலேயே பொருட்களை வாங்கிச்செல்வதாகவும் கடைக்காரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த இணைய சந்தையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உள்ளூர் சந்தைகளை பெரிதும் பாதிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் 3கோடி மளிகைக்கடைகள் இருக்கும் நிலையில் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவிற்குள் 54ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிகின்றன. ஆன்லைன் வணிகம் நடைபெறும் நிலையில் ஏற்கனவே பெருநகரங்களில் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ நகரங்களில் இது 40%பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அலோக் அகர்வால் என்பவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 15 முதல் 20 நகரங்களில் துரித வர்த்தக நிறுவனங்கள் ஆதிக்கம் இருப்பதாகவும் இதனால் பெட்டிக்கடைகள் கூட காணாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.