அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி..
இந்தியளவில் பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் கவுதம் அதானி, குறுகிய காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அதானி, தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டிருந்த அதானி,தனது சொத்து மதிப்பில் 12.4 பில்லியன் அமெரிக்க டாலரை ஒரே நாளில் இழந்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 69.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்திருந்த அதானி, ஒரே நாளில் 57.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து வைத்திருப்பதாக மாறியது. கவுதம் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதாவது அமெரிக்காவில் கடந்த 2020 முதல் 2024 வரை அதானி மற்றும் அவரின் சகாக்கள், சாகர் அதானி, வினீத் ஜாயின் ஆகியோர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், சோலார் ஆற்றல் சப்ளை தொடர்பாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபத்தை பெற இருந்ததாகவும் தகவல் வெளியானது. குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு லோன்கள் மற்றும் கடன் பத்திரங்களை அதானி கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு பிடிஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த புகார் வெளியானதும் அதானி கிரீன் எனர்ஜி, அதானி துறைமுகம் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 20 விழுக்காடு வரை குறைந்தது. இந்த நிறுவனங்களின் சந்தை மூலதனமதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்தது. கடந்த 2023-ல் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை வெளியான பிறகு ஒரே நாளில் 2லட்சம் கோடி ரூபாயை அதானி நிறுவனம் இழப்பது இதுவே முதல்முறையாகும். மூடீஸ் நிறுவன தரவுகளின்படி, அதானி குழுமப் பங்குகள் நெகடிவ் என வகைப்படுதத்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனத்தின் பங்குகள் ரோலர் கோஸ்டரைப் போல திடீரென உயர்வதும், திடீரென சரிவதுமாக இருந்து வருகிறது. இந்தியாவின் தூய்மை ஆற்றல் தொடர்பான இலக்கு நிறைவேறுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் மோசடிகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணப்புழக்கத்துக்காக அதானி குழுமம் என்ன மாதிரியான உத்திகளை கையாள்கின்றன என்பதை ஆராய வேண்டியுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.