புகார்கள் எல்லாம் பொய்:அதானி..
அமெரிக்காவில் லஞ்சம் வழங்கியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், இது தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தொடங்க இருப்பதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டத்துறையால் தங்கள் மீது சுமதப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை தங்கள் தரப்பு நிரபராதிகள்தான் என்று அதானி தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உச்சபட்ச வெளிப்படைத்தன்மையுடன் தங்கள் குழுமம் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் சிறந்த நிறுவனமாக அதானி குழுமம் இயங்குவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள லாபம் கிடைக்கும் வகையில் சோலார் திட்டங்களை பெற 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள லஞ்சம்கைமாறியது என்பதுதான் புகார். கடந்தாண்டு ஜனவரியில் தவறான கணக்குகள் காட்டியதாக ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அதானி குழுமத்தின் மீது புகார்களை முன்வைத்தது. தற்போது இரண்டாவது முறையாக அதானி குழுமத்தின் மீது புகார்கள் முன்வைக்கப்படுவதால் அந்நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களில் முக்கியமான நிறுவனமான சிடிபிகியூ நிறுவனத்தின் பணியாளர்கள் மீதும் தடயத்தை அழித்த புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்ததாக CDPQநிறுவனத்தின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.