மார்ஜின் ஆஃபரில் மிரட்டும் ரிலையன்ஸ்..
தங்கள் நிறுவன பொருட்கள் சந்தையில் அதிகம் விற்கப்படவேண்டும் என்பதற்காக , கடைக்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மார்ஜினை 6-8 விழுக்காடு வரை உயர்த்தி வழங்க ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விகிதம் என்பது சந்தையில் இருப்பதை விடவும் இருமடங்காகும். பிரிட்டானியா, இந்துஸ்தான் யுனிலிவர், ரெக்கிட், கொக்ககோலா, பார்லே, நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விநியோகஸ்தர்கள், வணிகர்களுக்கு 3 முதல் 5 விழுக்காடு மட்டுமே மார்ஜின் தருகின்றனர். சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை விற்கும் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனமும், சோப்புகள், பியூரிக் ஹைஜீன் சோப்புகள், தின்பண்டங்களை விற்று வருகின்றன. கேம்பா கோலாவை அறிமுகப்படுத்தும்போது எத்தகைய விற்பனை உத்தியை பயன்படுத்தியதோ அதே உத்தியைத்தான் ரிலையன்ஸ் தற்போது கையில் எடுத்துள்ளது. முதல்கட்டமாக சிறு சந்தைகளிலும், பின்னர் மெட்ரோவிலும் இந்த திட்டம் அறிமுகமாக உள்ளது. மற்ற போட்டியாளர்களைவிட ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்களில் விலை 20 முதல் 40% குறைவாக உள்ளது. அண்மையில் கேம்பா கோலா நிறுவனம் 200 மில்லி குளிர்பானத்தை 10 ரூபாய்க்கு விற்று வரும் நிலையில் பெப்சியும் கொக்க கோலாவும் 250 மில்லி பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். விளம்பரத்துக்கு அளிக்கும் தொகையை வணிகர்களுக்கு தருவதாக கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்