பிஸ்கட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்..
பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் சில பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டானியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பாமாயில் இறக்குமதி வரி 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அந்த நிறுவனம், வேறு வழியின்றி விலையேற்றம் செய்வதாக கூறியுள்ளது. தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் 3-5 விழுக்காடு அளவுக்கு விலையை ஏற்றியுள்ளதாகவும், படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களில் 4 முதல் 5 விழுக்காடு அளவுக்கு விலையை உயர்த்த இருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் புதிதாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில தயாரிப்புகளுக்கு இந்தியாவின் இரண்டு தென்மாநிலங்களில் அமோக வரவேற்பு இருப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.