இந்தியாவில் டெஸ்லா கார் இவ்ளோ விலையா …

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் புதிய ஷோரூமை திறந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெர்லின் நகரில் உள்ள தனது ஆலையில் இருந்து கார்களை இறக்குமதி செய்து முதல்கட்டமாக டெஸ்லா நிறுவனம் வரும் ஏப்ரலில் விற்பனை செய்யும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை 22லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏரோசிட்டி, மும்பையில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் ஷோரூம்கள் முதல்கட்டமாக திறக்கப்பட இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று வந்த அடுத்த சில நாட்களில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. டெஸ்லா கார் ஷோரூம்கள் இந்தியாவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் அதில் பணியாற்றுவதற்கான 13 நிலைகளிலான ஆட்களை டெஸ்லா தனது லிங்கிடு இன் பக்கம் மூலம் அறிவித்துள்ளது. சேவைதுறை, நிபுணர்கள், விற்பனை பிரதிநிதிகள் இந்த 13 பணிகளில் அடங்கும். கடந்தாண்டு ஏப்ரலில் இந்தியா வருவதாக இருந்த மஸ்க், கடைசி நேரத்தில் இந்தியாவை தவிர்த்துவிட்டு சீனா சென்றிருந்தார். இந்தியாவிற்குள் வெளிநாட்டு கார்கள் வரவேண்டுமெனில் 110 விழுக்காடு வரி இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் இது 70 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி அதிகம் என்ற ஒரே காரணத்தால், இந்தியாவிலேயே ஆலையை தொடங்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஆலை தொடங்க வேண்டுமெனில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்ற விதியை இந்தியா விதித்தது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் ஏற்கனவே மாருதி, டாடா, மகிந்திரா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன்,ரெனால்ட், பிஎம்டபிள்யு, ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனமும் விற்பனை போட்டியில் இணைய இருக்கிறது.