டிரம்ப் வச்ச ஆப்பு, அவருக்கே ரிப்பீட்டு…

இந்தியாவில்தான் மருந்துகளின் விலை குறைவாக இருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஏற்கனவே மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது. இந்த சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டின் மீது அதிக வரி விதித்தால், தாங்களும் அதே பதில் வரியை விதிப்போம் என்று அண்மையில் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் ஏற்கனவே மருந்துகளின் விலை அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு பலமடங்கு வரி உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மருந்து விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் அமெரிக்காவில் மிகவும் குறைவு என்று கூறும் சன் பார்மா நிறுவனத்தின் தலைவர். அதிகரிக்கும் விலை வாடிக்கையாளர்கள் தலையில்தான் செல்லும் என்றும் கூறியுள்ளார். அந்த நிறுவனத்தின் அமெரிக்க விற்பனை மட்டும் 32 விழுக்காடு இருந்ததாகவும், 47 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு இந்த வணிகம் நடந்துள்ளதாகவும் திலீப் ஷாங்க்வி கூறியுள்ளார். .
இந்தியாவில் விற்கப்படும் உயிர்காக்கும் மருந்துகள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சிப்ளா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உமாங் ஓரா கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளால் அமெரிக்காவிற்கு 219 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மிச்சமாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மருந்துகளில் 60 விழுக்காடுக்கு வரி ஏதும் கிடையாது. அதே நேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மருந்துகளுக்கு 10 மடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று மருந்து நிறுவனங்களை செயல்படுத்த பலரும் முன்வருவதில்லை என்றும் ஐபிஏ என்ற இந்திய மருந்து கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பதில்வரியை போட்ட அமெரிக்காவிற்கே அவர்கள் வைத்த ஆப்பு திரும்பியுள்ளது.