TATA குழுமத்தில் முதல் முறையாக..
டாடா குழுமத்தின் ஓய்வூதியக் கொள்கையிலிருந்து முதன்முறையாக விலகும் விதமாக,டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு பதவி காலத்தை நீட்டிக்க டாடா டிரஸ்ட்ஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் மூலம் சந்திரசேகரன் மூன்றாவது முறையாக டாடா சன்ஸ் நிறுவன தலைவராக பதவி வகிக்க உள்ளார். இதன் மூலம் டாடா குழுமம், அதன் பதவி ஓய்வு கொள்கையில் இருந்து முதல் முறையாக விலகியுள்ளது. இதற்கு முன்பு வேறு எந்த ஒரு தலைவருக்கும் மூன்றாவது முறையாக பதவி அளிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரனின் இரண்டாவது பதவிக்காலம் பிப்ரவரி 2027 இல் முடிவடையும் போது அவருக்கு 65 வயது ஆகியிருக்கும். குழும் விதிகளின் கீழ், நிர்வாகிகள் 65 வயதில் அத்தகைய பதவிகளில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் 70 ஆண்டுகள் வரை நிர்வாக அதிகாரமற்ற பதவிகளில் நீடிக்கலாம்.
செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்ற தொடர்ச்சியான நிர்வாகத் தலைமை அவசியம் என்று கருதப்பட்டதாக கூறப்படுகிறது.
“டாடா டிரஸ்ட்களின் தீர்மானம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 2027ல் இதன் அடிப்படையில் சந்திரசேகரின் மூன்றாவது பதவிக்காலத்தை அங்கீகரிக்க வேண்டியிருக்கும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத உள்வட்ட நபர் ஒருவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 11 அன்று நடந்த டாடா டிரஸ்ட்ஸ் கூட்டத்தில், குழுவின் தற்போதைய வணிக மாற்றத்திற்கான தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி, சந்திரசேகரனுக்கு மூன்றாவது ஐந்தாண்டு நிர்வாகக் காலத்தை, நோயல் டாடா மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் முன்மொழிந்தாக கூறப்படுகிறர். பின்னர் இந்தத் தீர்மானம் ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்டது.
டாடா டிரஸ்ட்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
