ஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்
இந்தியாவில் ஷெல் பிஎல்சி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான நிதியுதவியாக, ரூ. 14,000 கோடி கடனை ஆதித்யா பிர்லா குழுமம் கோரியிருந்தது. ஆனால், குறைந்தது நான்கு வங்கிகளிடமிருந்து மொத்தம் ரூ. 24,000 கோடி வரையிலான கடன் உறுதிமொழிகள் கிடைத்துள்ளன; இது அவர்கள் திட்டமிட்டிருந்த தொகையை விட 70% அதிகமாகும். இத்தகவலை அறிந்தவர்கள் இதனைத் தெரிவித்தனர். ஆக்சிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை தலா ரூ. 7,000 கோடி வரையிலும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை தலா சுமார் ரூ. 5,000 கோடி வரையிலும் கடன் வழங்க முன்வந்துள்ளன. எனினும், உண்மையில் வழங்கப்படும் கடன் தொகை இந்த உச்ச வரம்புகளை விடக் குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கூறினர். மேலும், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட சில பெரிய வங்கிகளுடனும் கடன் வசதி பெறுவது குறித்து அக்குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவின் 4,000 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பெருநிறுவன ஒப்பந்தச் சந்தையில், பெரிய கையகப்படுத்தல்களுக்கு நிதியளிப்பதில் உலகளாவிய வங்கிகளுடன் போட்டியிடும் இந்தியக் கடன் வழங்குநர்களின் மிகுந்த ஆர்வத்தை இந்த உறுதிமொழிகள் வெளிப்படுத்துகின்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, பெருநிறுவனக் கையகப்படுத்தல்களுக்கு நிதியளிக்க உள்ளூர் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை 1 முதல் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதித்யா பிர்லா ரினியூவபிள்ஸ் லிமிடெட், சோலனெர்ஜி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளைக் கையகப்படுத்தி, அந்நிறுவனத்தின் 5 ஜிகாவாட் திறன் கொண்ட சொத்துகளின் கட்டுப்பாட்டை ஏற்கவுள்ளது. இந்தியாவில் ஷெல் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துக்களை நிர்வகிக்கும் ஸ்ப்ரிங் எனர்ஜி நிறுவனத்தை சோலனெர்ஜி தன்வசம் கொண்டுள்ளது. பல வங்கிகள் இணைந்து வழங்கும் இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 7.6% முதல் 7.7% வரையிலும், கடன் காலம் 12 முதல் 20 ஆண்டுகள் வரையிலும் இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இக்கடன் அக்குழுமத்தின் ஆதரவு பெற்ற பல்வேறு ‘சிறப்பு நோக்க வாகனங்கள்’ (SPVs) மூலம் பெறப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
