கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவு
கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் அந்நாட்டிற்குப் போதுமான பலன்களை அளிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்துமாறு கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டாடா கெமிக்கல்ஸின் செயல்பாடுகளை ஏற்று நடத்த இரண்டு புதிய நிறுவனங்களைக் கொண்டு வரப்போவதாக ரூட்டோ தெரிவித்தார்.
“நாங்கள் ஒரு புதிய நிறுவனத்தைக் கொண்டுவருவோம் என்று கூறியுள்ளோம். அவர்கள் இங்கே கஜியாடோவில் (Kajiado) ஒரு பெரிய கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தை அமைக்க வேண்டும். அத்துடன், கஜியாடோவில் ரசாயனங்களைத் தயாரிப்பதற்கான மற்றொரு நிறுவனமும் வர வேண்டும். நாம் என்ன மற்றவர்களுக்கு அடிமைகளா?” என்று தெற்கு கென்யாவின் கஜியாடோ பகுதிக்குச் சென்றிருந்த போது ரூட்டோ பேசினார்.
டாடா நிறுவனம் 100 ஆண்டுகளாக ஒப்பந்தத்தை வைத்திருந்த போதிலும், அப்பகுதியில் ஒரு தொழிற்சாலையைக் கூட அமைக்கவில்லை என்று அவர் கூறினார்.
மகாடி சோடா (Magadi Soda) தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்துமாறும், சோடா ஆஷ் (soda ash) ஏற்றுமதியை நிறுத்துமாறும் டாடா கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு கென்ய அரசு ஜூலை மாத இறுதியில் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கஜியாடோவில் கண்ணாடி மற்றும் ரசாயன உற்பத்தி நிலையங்களை நிறுவ புதிய நிறுவனங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக ரூட்டோ தெரிவித்தார்.
