உள்நாட்டு சந்தையில் கவனம் குவிக்கும் சிப்லா நிறுவனம்
சிப்லா லிமிடெட் நிறுவனம் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உள்நாட்டுச் சந்தையில் தனது கவனத்தைக் கூர்மைப்படுத்தும் என்றும், சுவாசப் பிரிவுக்கான தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் என்றும், அந்த மருந்து நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்க இருக்கும் அச்சின் குப்தா தெரிவித்தார்.
“எங்களிடம் ஒரு மிக உறுதியான தளம் மற்றும் தொழில்முறையாக நடத்தப்படும் அமைப்பு உள்ளது. நாங்கள் மேலும் செய்ய அல்லது வித்தியாசமாகச் செய்ய விரும்பும் விஷயங்கில் , இந்தியாவில் எங்கள் சந்தை இருப்பை ஆழப்படுத்துவதும் அடங்கும்” என்று குப்தா கூறினார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் குப்தா, சுவாச சிகிச்சைகளில் சிப்லா தலைமைத்துவத்தை அனுபவித்து வந்தாலும், இருதய வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற, அதிக வளர்ச்சி காணும் இதர வகை நாள்பட்ட நோய்ப் பிரிவுகளிலும் தலைமைத்துவத்தை அடைய தமது நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகக் கூறினார்.
“சுவாசப் பிரிவில் எங்களிடம் தலைமைத்துவம் உள்ளது. முதுமை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிக பாதிப்புகளைக் காணவிருக்கும் இருதய வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற பிற நிலைகளிலும் இதே போன்ற தலைமைத்துவத்தை நம்மால் உருவாக்க முடியுமா?” என்று குப்தா கூறினார். “இதற்காக நாங்கள் உள் ரீதியாகவும், பல வழிகளில் கூட்டு முயற்சி மூலமாகவும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
குப்தாவின் கூற்றுப்படி, இருதய வளர்சிதை மாற்றப் பராமரிப்பில் குறுகிய கால முக்கியக் கவனம், GLP-1 எடை குறைப்புப் பிரிவில் இருக்கும். இதில் சிப்லா, இந்தியாவில் டீர்செபாடைடை சந்தைப்படுத்த எலி லில்லி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், இந்த நிறுவனம் அதன் புரட்சிகரமான எடை குறைப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்தின் இரண்டாவது பிராண்டை சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் அந்த அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
டிசம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 57% சரிந்து ரூ. 676 கோடியாக இருந்தது. ரெவ்லிமிட் (லெனலிடோமைடு) விற்பனையில் ஏற்பட்ட சரிவால், வருவாய் ரூ. 7,074 கோடியாக மாற்றமின்றி இருந்ததாகக் கூறியது.
