ஆலமரமாக இன்னும் வளரும் டாடா :
ஒடிசாவை தளமாகக் கொண்ட திரிவேணி பெல்லெட்ஸில், 50.01% பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் நிதி மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த கொள்முதல், டாடா ஸ்டீலின் மூலப்பொருள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும். இரும்புத் தாது துகள்கள், எஃகு உற்பத்தி செய்ய கோக்கிங் நிலக்கரியுடன், வெடிப்பு உலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
திரிவேணி பெல்லெட்ஸின் ஒரு அங்கமான பிராமணி ரிவர் பெல்லெட்ஸ் நிறுவனம், ஒடிசாவின் ஜாஜ்பூரில் ஆண்டுக்கு 40 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட பெல்லெட் ஆலையை இயக்குகிறது. இது டாடா ஸ்டீலின் கலிங்காநகர் ஆலை மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா ஸ்டீல்ஸ் வாங்கிய நீலாச்சல் இஸ்பத் நிகாமுக்கு அருகில் உள்ளது.
கையகப்படுத்தலுக்குப் பிறகு, திரிவேணி பெல்லெட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி இடையே ஒரு கூட்டு முயற்சியாக மாறும். லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் அட்லர் இண்டஸ்ட்ரியல் சர்வீசஸிடமிருந்து திரிவேணி பெல்லெட்ஸின் 49.99% பங்குகளை வாங்கியது.
நாட்டின் மிகப்பெரிய வணிக பெல்லெட் உற்பத்தியாளர்களில் ஒன்றான பிராமணி ரிவர் பெல்லெட்ஸ், ஒடிசாவின் பார்பிலில் 47 லட்சம் டன் இரும்புத் தாது சுத்தீகரிப்பு ஆலையை இயக்குகிறது. இரண்டு யூனிட்களும் ஒரு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம், பிராமணி ரிவர் பெல்லட்ஸின் 100% பங்குகளை ₹900 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் 2017 இல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. டாடா ஸ்டீல்ஸ் அதன் கலிங்காநகர் ஆலையுடன் இதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தது.
2023-24இல், பிராமணி ரிவர் பெல்லட்ஸின் வருவாய் ₹2,473.91 கோடியாக இருந்தது. லாபம் ரூ.38.67 கோடியாக இருந்தது. இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் வணிக உற்பத்தியைத் தொடங்கியது .இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தியில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்ட ஒடிசாவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
