மாதத்தில் 10 நாட்கள் ஆபிசுக்கு வாங்க பாஸ்..
கொரோனா காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியது. இந்த பணியாளர்களில் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற டிசிஎஸ் வலியுறுத்தியுள்ளது.
இதே பாணியில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் துவக்க நிலை மற்றும் நடுத்தர பணியாளர்கள் மாதத்தில் 10நாட்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களை அறிவுறுத்தியிருக்கிறது. Return to office என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த புதிய திட்டம் அமலாக இருக்கிறது. இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமே பொருந்தும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர பணியாளர்கள் பிரிவில் புராஜெக்ட் மேனேஜர், புராஜெக்ட் ஹெட்,மற்றும் துவக்க நிலை பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. குழுவாக பணியாற்ற இந்த புதிய முறை பெரிதும் உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசிஎஸ் , இன்போசிஸ் மட்டுமின்றி,விப்ரோ, கேப்ஜெமனை,LTIமைன்ட்ரீ,ஆகிய நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதமே டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி அனைவரையும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற அனுமதித்துள்ளது. அதே சமயம் தேவை ஏற்படும்பட்சத்தில் வீட்டில் இருந்து பணியாற்றவும் டிசிஎஸ் நிறுவனம் அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.