ரிலையன்ஸ் பற்றி ஜே.பி.மோர்கன் கருத்து..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (RIL) சில்லறை விற்பனை பிரிவான ரிலையன்ஸ் ரீடெயிலின் மதிப்பு 14,300 கோடி டாலர் என்றும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் மதிப்பு 13,500 கோடி டாலராகவும் பன்னாட்டு வங்கியான ஜேபி மோர்கன் மதிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை பங்கு சந்தையில் பட்டியலிடப் போவதாக கடந்த மாதம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் நுகர்வோர் வணிக பிரிவு வரும் ஆண்டுகளில் குழுவின் அனைத்து வருவாய் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருக்கும் என்று JP மோர்கன் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயிலின் டிசம்பர் வருவாய் சமீபத்திய GST குறைப்புகளால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் முதல்கட்ட பங்கு விற்பனைக்கு (IPO) முன்னதாக தொலைபேசி கட்டணங்களை அந்நிறுவனம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
”2024-25ல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த EBITDA-வில், சில்லறை விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுகள் 54 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
எங்கள் மதிப்பீடுகளின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளின் நிகர EBITDA வளர்ச்சியில் ஏறக்குறைய முழு பங்களிப்பை அவை அளிக்கும்”என JP மோர்கன் ஆய்வாளர்கள் செப்டம்பர் 30ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
EBITDA என்பது வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் செலவுகளுக்கு முந்தைய வருவாயைக் குறிக்கிறது.
ரிலையன்ஸ் ரீடெய்லில் RIL வசம் உள்ள 83 சதவீத பங்குகளின் மொத்த மதிப்பு ₹10.5 லட்சம் கோடி ($11,800 கோடி) அல்லது ஒரு பங்குக்கு ₹776 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது FY27-FY28இல் EBITDAஇன் கணிக்கப்பட்ட அளவை போல 34.5 மடங்கு இருக்கும் என்ற அடிப்படையில் கணிக்கபட்டுள்ளது. ஜேபி மோர்கன் EBITDA அளவு FY27இல் ₹34,400 கோடியாக இருக்கும் என்றும், FY28 இல் ₹39,000 கோடியாக உயரும் என்று கணித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்லின் பங்கு மதிப்பு, அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் 42 மடங்கு மதிப்பிற்கு கீழே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முதல்கட்ட பங்கு விற்பனை (IPO) அல்லது பங்கு தொகுப்பு விற்பனை மூலம் இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவில் RIL வசம் உள்ள 67 சதவீத பங்குகளின் மொத்தம் மதிப்பு ₹8 லட்சம் கோடி ($9,000 கோடி) அல்லது ஒரு பங்குக்கு ₹592 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது FY27-FY28இல் EBITDAஇன் கணிக்கப்பட்ட அளவைப் போல 13x மடங்கு இருக்கும் என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. FY27 இல் இது ₹86,400 கோடி EBITDAஐ ஈட்டும் என்றும் இது FY28 இல் கிட்டத்தட்ட ₹97,600 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, ரிலையன்ஸின் எண்ணெய் முதல் ரசாயனங்கள் வரையிலான (O2C) பிரிவின் மதிப்பு ₹4.85 லட்சம் கோடி அல்லது ஒரு பங்கிற்கு ₹358 என மதிப்பிட்டுள்ளது.
