பயோசிமிலர் மருந்தை சந்தை படுத்தும் சைடஸ்…!
கீட்ருடா (பெம்ப்ரோலிசுமாப்) மருந்துக்கு மாற்றாக, அதன் பயோ சிமிலரான FYB206 மருந்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் சந்தைபடுத்த, சைடஸ் லைஃப் சைன்சசஸ் மற்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட ஃபார்மைகான் ஏஜி நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன.
சைடஸ் லைஃப் சைன்சசஸ் என்பது இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து மற்றும் உயிர் அறிவியல் நிறுவனமாகும். இது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் செயல்படுகிறது. செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, இந்தக் குழுவில் 1,500 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விஞ்ஞானிகள் உட்பட சுமார் 27,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஃபார்மைகான் நிறுவனம் மருந்து தயாரிப்பின் மேம்பாடு, ஒழுங்குமுறை சமர்ப்பிப்புகள், உற்பத்தி மற்றும் விநியோகத்தை கையாளும். சைடஸ் லைஃப் சைன்சசஸ் நிறுவனத்தின் UAE-ஐ தளமாகக் கொண்ட துணை நிறுவனமான சைடஸ் லைஃப் சைன்சசஸ் குளோபல் FZE, இரண்டு வட அமெரிக்க சந்தைகளில் பயோசிமிலரை வணிகமயமாக்குவதற்கு பொறுப்பேற்கும். FYB206-க்கான உயிரியல் உரிம விண்ணப்பம் (BLA) விரைவில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்தன.
பெம்ப்ரோலிசுமாப் உலகளவில் பரந்த ஒழுங்குமுறை ஏற்றுக்கொள்ளலைக் கண்ட நேரத்தில் இந்த கூட்டு முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. T-செல்களை தவிர்க்க, சில புற்றுநோய் செல்கள் பயன்படுத்தும் PD-1 பாதையைத் தடுப்பதன் மூலம் பெம்பிரோலிஸுமாப் செயல்படுகிறது, இதன் மூலம் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை சிறப்பாக அடையாளம் கண்டு குறிவைக்க உதவுகிறது.
இம்யூனோ-ஆன்காலஜி தயாரிப்பு மூலம் வட அமெரிக்க பயோசிமிலர்கள் பிரிவில் இந்நிறுவனத்தின் நுழைவை இந்த கூட்டு முயற்சி குறிக்கிறது என்று சைடஸ் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் கூறினார். எதிர்கால உற்பத்திக்காக கலிபோர்னியாவில் உள்ள ஏஜெனஸ் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை சைடஸ் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி அந்தத் திட்டத்துடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.
ஃபார்மைகான் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் குளோம்பிட்சா, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கான பயோசிமிலர்களை உருவாக்குவதில் நிறுவனத்தின் திறன்களை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என்றும், சைடஸின் ஒழுங்குமுறை மற்றும் வணிக நெட்வொர்க் அமெரிக்கா மற்றும் கனடாவில் FYB206க்கான சந்தை அணுகலை ஆதரிக்கும் என்றும் கூறினார்
