114 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி?
இந்தியாவில் 2023-24 காலகட்டத்தில் 114 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். குளிர்காலத்தில் விதைக்கப்பட்ட கோதுமை அடுத்த வாரம் வரை நடவு செய்யப்பட இருக்கிறது. நடப்பு ராபி பருவத்தில் மட்டும் இதுவரை 320.54 லட்சம் ஹெக்டேரில் கோதுமை பயிரடப்பட்டுள்ளது. 2022-23 காலகட்டத்தில் 110.55 மில்லியன் டன்னாக கோதுமை உற்பத்தி இருந்தது. 2021-22 காலகட்டத்தில் மட்டும் 107.7 மில்லியன் டன்னாக கோதுமை உற்பத்தி இருந்தது.
உற்பத்தி சீராக இருந்தால் நடப்பாண்டில் 114 மில்லியன் டன்னாக கோதுமை விளையும் என்று உணவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்தாண்டு முழுவதும் கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவாது என்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜனவரியில் விதைக்கப்பட்ட கோதுமை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி அளவில் அறுவடை செய்யப்படும். அப்போது கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்தாண்டை விட 7 விழுக்காடு அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. fci நிறுவனம் அரிசி மற்றும் கோதுமையை வாங்கி வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசுக்காக 26.2 மில்லியன் டன் கோதுமையை கடந்தாண்டு வாங்கியிருந்தது. இது வருடாந்திர சராசரியான 18.4 மில்லியன் டன்னைவிட அதிகமாகும். இந்தியாவில் 81 கோடி இந்தியர்களுக்கு ரேஷன் மூலம் கோதுமை இலவசமாக அளிப்பதில் FCI நிறுவனத்தின் பங்கு மிகமுக்கியமானது.