47% ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அனுமதியே இல்லையா-அதிர்ச்சி அறிக்கை
லான்செட் என்ற நிறுவனம் சுகாதார ஆய்வுகளில் உலகளவில் பிரபலமானதாக உள்ளது. இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய சுகாதாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2019ம் ஆண்டு, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 47 விழுக்காடு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு அனுமதியே அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கொல்லி எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்த பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அசித்ரோமைசின் 500mgமருந்துதான் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 7 புள்ளி 6 விழுக்காடு பேர் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடுத்தபடியாக செபிசைம் 200mg மாத்திரை 6.5% பேர் உட்கொள்கின்றனர்.இந்தியர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மாத்திரைகளை தனியாரே உற்பத்தி செய்வது தெரியவந்துள்ளது. அதாவது 85-90%. இந்த எண்ணிக்கை 5 ஆயிரம் மருந்து நிறுவனங்கள் மற்றும் 9 ஆயிரம் மருந்து விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விகிதம் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் அடிப்படை மருந்துகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள மருந்துகளைத்தவிர மொத்தம் 47% மருந்துகள் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செபலாஸ்போரின்,மேக்ரோலைட்ஸ் மற்றும் பெனிசிலின் வகை மருந்துகள்தான் அனுமதியின்றி பரிந்துரைக்கப்படும் முக்கிய 3 மருந்துகளாக பட்டியலிடப்பட்டுள்ளது.
எந்தவித அனுமதியும் பெறாமல் விற்கப்படும் மருந்துகளை பொதுமக்களே எளிதில் பெறும் வகையில் இருப்பதாகவும் லான்செட் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 47 விழுக்காடு மருந்துகள் அனுமதியின்றி செயல்படுவது இந்திய மருத்துவத்துறையில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிர்ச்சி தரும் இந்த முடிவுகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.