5.66 லட்சம் கோடி ரூபாய் லாபம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளும் இந்திய பங்குச்சந்தையில் அதிகம் புழங்கியதால் சந்தை ஏற்றம் பெற்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுபெற்றதால் இந்தியப்பங்குசந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகள், காலாண்டு செயலாக்க அறிக்கை ஆகியவை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய சந்தைகளுக்கு வரும் பணத்தில் இந்த மாத்ததில் முதல் 2 நாட்களில் மட்டும் 1,344 கோடி கிடைத்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வார சரிவுக்கு பிறகு மீண்டும் எழுந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.