தொடரும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை..
இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய காலவரம்பின்றி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல வெளிநாடுகளில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உலகின் பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா கடந்த டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்தது. இந்த தடை காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிய இருக்கிறது.
இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி இல்லாததால் உள்ளூர் சந்தையிலேயே வெங்காயம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை காலவரம்பற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் 4,500 ரூபாயாக இருந்த 100 கிலோ வெங்காய மூட்டை தற்போது ஆயிரத்து 200 ரூபாயாக சரிந்துள்ளது. இந்த நேரத்தில் வெங்காய ஏற்றுமதியை நீட்டிப்பது சரியல்ல என்று மகாராஷ்டிரா விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரும் 19 ஆம் தேதி தொடங்கி அடுத்த 7 வாரங்களுக்கு பல பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வங்கதேசம், மலேசியா,நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து விளையும் வெங்காயத்தை நம்பியே இருக்கின்றனர். இந்தியா ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்த நாடுகளில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவிடம் இருந்து வெங்காயம் வராததால் அதிக விலை கொடுத்து இந்த நாடுகள் வெங்காயத்தை வாங்கி வருகின்றனர். சீனா, எகிப்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வது மிகமிக சுலபமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற அறிவிப்பால் இரண்டரை மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் கடந்த மார்ச் 31 வரை ஏற்றுமதி செய்யப்பட்டது முற்றிலுமாக தடை பட்டுள்ளது.