5.29லட்சம் கோடி புஸ்க்..
செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 5லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 820 புள்ளிகள் குறைந்து 78ஆயிரத்து675 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 257 புள்ளிகள் குறைந்து 23,883 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்., டிரென்ட்ட், HCL டெக்னாலஜீஸ் , சன்பார்மா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி வங்கி, என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. ஆட்டோமொபைல், வங்கி, உலோகம் , ஆற்றல் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் அரை முதல் 2 விழுக்காடு வரை சரிவை கண்டன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் சரிவு, முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுத்தது, பல நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மோசமாக இருந்ததும் பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாகும். சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து 57 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றது. கடந்த மாதம்16 ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தீபாவளி தினமான கடந்த மாதம் 31 ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 58 ஆயிரத்து 280 ரூபாயாக இருந்த தங்கம் 9 ஆம் தேதி 58 ஆயிரத்து 200 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை ஒரு சவரன் தங்கம் விலை 57 ஆயிரத்து 760 ரூபாயாக இருந்தது. இந்த சூழலில் ஒரே நாளில் தங்கம் விலை ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 680 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 135 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 85 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ 2 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், ஜிஎஸ்டி நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்