ரத்தன் டாடா மறைவுக்கு பில் ஃபோர்ட் இரங்கல்..
மறைந்த பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவை 1999-ல் வில்லியம் பில் ஃபோர்டு அவமானப்படுத்தியதாக பரவலாக ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது குறித்து ஒரு தெளிவு தற்போது கிடைத்திருக்கிறது. ரத்தன் டாடாதனது காரை ஃபோர்டு நிறுவனத்தில் விற்க முயற்சித்ததாகவும் ஆனால் ஃபோர்டு நிறுவனம் அதனை மறுத்துவிட்டதுடன், கார் வணிகம் பற்றி எதுவுமே தெரியாமல் ஏன் வணிகத்தை தொடங்குகிறீர்கள் என்று பில் கேட்டதாகவும் பரவலாக தகவல் உலா வருகின்றன. உண்மையில் இதுபற்றி பில் ஃபோர்டு தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில், தாமும் ரத்தன் டாடாவும் ஒருமுறை மட்டுமே சந்தித்தாகவும், அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக பில் கூறியுள்ளார். அந்த சந்திப்பின்போது குடும்பமாக வணிகம் செய்வது குறித்தும், இருவருக்கும் பொதுவான கார்கள் மீதான கார் காதல் குறித்தும் இருவரும் பேசியதாக கூறியுள்ளார். ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டார். ஃபோர்டு அவமதித்ததாக கூறப்படுவதை டாடா குழுமமும் மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமே இல்லாமல் பத்திரிகைகளில் ஃபோர்டு நிறுவனம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் ஃபோர்டு நிறுவனம் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பில்ஃபோர்டு, ரத்தன் டாடவின் நற்பெயர் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் முன்னுதாரணமாக திகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.