ஆட்குறைப்பில் ஈடுபடும் போயிங்..

பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்தியாவில் தனது பணியாளர்களில் 180 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பிங்க் ஸ்லிப்களை அந்நிறுவனம் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் அளித்துள்ளது. இந்தியாவில் போயிங் நிறுவனத்துக்கு 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்., இந்த நிலையில் தங்கள் பணியாளர்களில் 10 விழுக்காடு அளவுக்கு குறைக்க அந்த நிறுவனம் கடந்தாண்டு முடிவெடுத்தது. அதன்படியே, ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. பெங்களூருவில் உள்ள போயிங் இந்தியா இன்ஜினியரிங் டெக்னாலஜி மையத்தில் 180 பேரை வேலையை விட்டு தூக்குவதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் போயிங் வெளியிடவில்லை. ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. பழைய பதவிகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு புதிய பதவிகளையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு, தரக்குறியீடு ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெங்களூருவில்தான் போயிங் நிறுவனம் பெரிய முதலீடு செய்தது. 300க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இந்த நிறுவனத்துக்கு பொருட்களை அளித்து வருகின்றனர். அந்த நிறுவன இணையதளத்தின் தகவலின்படி, இந்தியாவில் அந்த நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருவது தெரியவந்தது.