தங்கம், வெள்ளி விலையில் சரிவு.. காரணம் என்ன??
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை அமெரிக்காவில் தங்கத்தின் விலை இரண்டு விழுக்காடு வரை வீழ்ச்சியை சந்தித்தது. தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிவு மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து சாதகமான தகவல் தெரிவித்து வரும் நிலையில் தங்கம் விலை சரிந்து உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு ஒரு அவுன்ஸ் தங்கம் 2400 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பங்குச்சந்தைகள் மற்றும் தங்கம் வெள்ளி விலை விழ முக்கியமான காரணமாக அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் 4.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் பெரிய சரிவு காணப்பட்டது. தங்கத்தைப் போலவே வெள்ளியிலும் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது 5.7 சதவீதம் அளவுக்கு வெள்ளியின் விலை கடுமையாக விழுந்து உள்ளது. பிளாட்டினம் மற்றும் பலாடியம் ஆகிய உலோகங்களின் விலைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தேவை குறைவு காரணமாக பிளாட்டினம் மற்றும் பலாடியம் உலோகங்களை மக்கள் வாங்குவது குறைந்துள்ளது.